இரு கைகளும் இல்லாத நிலையிலும், கால்களையே வில்லாகவும் கருவியாகவும் பயன்படுத்தி உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வருகிறார் 19 வயது ஷீத்தல் தேவி. ஜப்பானில் நடைபெறும் பாரா ஆசிய விளையாட்டுத் தொடரில் ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ள அவர், இந்தப் போட்டியில் இதுவரை மூன்று பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஷீத்தல் தேவி, வில்வித்தையில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். கைகளின் உதவியின்றி கால்களால் வில்லை இயக்கி, இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் அவரது திறமைதான் அவரை மற்ற வீரர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. நகோயாவில் நடைபெறும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுத் தொடரிலும் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.
பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் அலிம் நூர் சியாஹிடாவை எதிர்கொண்ட ஷீத்தல் தேவி, 142-139 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதற்கு முன்பு தோமன் குமாருடன் இணைந்து கலப்பு அணிப் பிரிவில் களமிறங்கிய அவர், இறுதிப் போட்டியில் இந்தோனேசிய ஜோடியை 151-148 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மற்றொரு தங்கத்தை வென்றார்.
இந்தத் தொடரில் ஷீத்தல் தேவியின் பதக்க வேட்டை இதோடு முடியவில்லை. பாயக் நாக் உடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் ஏற்கெனவே வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். இதனால் அவரது பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்களை வென்றிருந்த அவர், இம்முறையும் அதே சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கிடையே, இந்திய அணியும் பதக்கப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. போட்டியின் ஐந்தாவது நாளில் மட்டும் இந்திய வீரர், வீராங்கனைகள் 7 தங்கம், 4 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களை வென்றனர். இதன் மூலம் தென்கொரியாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா நான்காவது இடத்துக்கு முன்னேறியது.
ஜப்பானின் நகோயாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வரும் நிலையில், ஷீத்தல் தேவியின் சாதனை இந்திய அணியின் வெற்றிக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.
Also Read: பள்ளி முதல் கல்லூரி வரை… மாணவர்களின் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கிய தமிழக அரசு..



