போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி இடையே நடந்த காரசார விவாதத்திற்கு மத்தியில், அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என்று கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் கோவை மாணவர் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தொடர்ந்து, “100 நாள் சாதனை எனப் பெருமை பேசும் த.வெ.க அரசு, இந்த 100 நாட்களில் சட்டம் – ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும். போதைக்கு எதிரான தொடர் ஒழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோவையில் மாணவர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கோஷ்டி மோதல் என்று அமைச்சர் கூறுகிறார்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, அதற்கு அமைச்சர் நிர்மல் குமார், ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா ஆகியவர்கள் பதிலளித்த நிலையில், கோவை, திருவொற்றியூர் மாணவர் கொலை வழக்கில் த.வெ.க விளக்கம் முறையாக இல்லை என்று தி.மு.க வெளி நடப்பு செய்தது.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், உரிய விளக்கமும் தெளிவான பதிலும் அளிக்காத தவெக அரசு, எல்லாவற்றிக்கும் திமுக ஆட்சியை பற்றி பேசுகிறது என்று குற்றம்சாட்டினார். எந்த அமைச்சர்களும் துறை சார்ந்து பதிலளிப்பதில்லை, சட்டம்-ஒழுங்கிற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் சட்டமன்றத்திற்கு வரவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார்.



