இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மும்பையின் காற்று மாசு அளவு மிகவும் மோசமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஐக்யூ ஏர்’ (iQAir) உலகளாவிய காற்று தர மதிப்பீட்டு அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாகவும், உலகளவில் ஐந்தாவது மிகவும் மாசுபட்ட நகரமாகவும் மும்பை பதிவாகியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி மும்பையின் காற்று தரக் குறியீடு (AQI) 152 ஆகப் பதிவாகியுள்ளது. இது ‘ஆரோக்கியமற்றது’ (Unhealthy) என்ற பிரிவின் கீழ் வருகிறது. குறிப்பாக, தரைமட்ட ஓசோன் (Ground-level Ozone – O3) இந்த நகரின் முதன்மைக் மாசுபடுத்தியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு குறைவான பருவமழைக்குப் பிறகு, மும்பையில் வழக்கத்திற்கு மாறாக வெயிலும் அதிக ஈரப்பதமும் நிலவி வருவதே இந்த நிலைமைக்கு முக்கியக் காரணமாகும். பருவமழை முன்கூட்டியே விலகியதைத் தொடர்ந்து, இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை கடந்த தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு உச்சபட்ச வெப்பநிலையை நகரம் பதிவு செய்துள்ளது. இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்திருப்பது காற்று தரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது.



