தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ புகைப்படம் காட்சிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் புகைப்படங்களை காட்சிப்படுத்துவது இந்தியாவில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒரு நிர்வாக மரபு. 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகத்தின் 18வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜயின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பிற அரசு கட்டிடங்களில் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை காட்சிப்படுத்த வேண்டும் என அனைத்து துறைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக ஒரே மாதிரியான அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரேஷன் கடைகள் உள்ளிட்ட பொதுச் சேவை மையங்களிலும் முதலமைச்சரின் படம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



