குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை எந்த பெற்றோருக்கும் இல்லாமல் இருக்காது. ஆனால் “ஆரோக்கியம்” என்ற பெயரில் சில சமயங்களில் நாம் அறியாமலேயே குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை உருவாக்கிவிடுகிறோம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
“நன்றாக சாப்பிட்டால் போதும்” என்ற எண்ணத்தில், எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொடுத்து விடுகிறோம். ஆனால் அது உண்மையில் குழந்தைகளுக்கு நன்மையை விட தீமையே அதிகமாக ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, சில குழந்தைகள் சிறு வயதிலேயே சுகர், பிரஷர் போன்ற பிரச்சனைகளாலும், சில நேரங்களில் கேன்சர் தீவிரமான உடல்நலக் கோளாறுகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.
பெற்றோர் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எதை கொடுத்தாலும் அளவோடு கொடுக்க வேண்டும். “அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு” என்ற பழமொழிக்கேற்ப, நல்ல உணவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதற்கு உதாரணமாக, அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆம், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் 117 கிலோ உடல் எடையை எட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, பேசும் திறன் குறைபாடு கொண்ட அந்தச் சிறுவனுக்கு சரியான உணவுமுறை கடைபிடிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, அளவுக்கு மீறிய உணவு தொடர்ந்து வழங்கப்பட்டதால் அவரது உடல் எடை 117 கிலோவாக அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் படுக்கையிலேயே நகர முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமடைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடல் பருமனால் ஏற்பட்ட தீவிர உடல்நலக் கோளாறுகளைத் தொடர்ந்து, சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை நேரத்தில் வழங்கப்படாததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தை வன்கொடுமை, கடுமையான சித்திரவதை மற்றும் இரண்டாம் நிலை கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read: பாத்ரூமுக்குள் மறைந்திருந்த மர்மம்… போலீசை அதிரவைத்த உண்மை!


