திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம் அடுத்த முகாம்பிகை நகர் 2வது வீதியில் உள்ள வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று முன்தினம் இரவு வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, வீட்டிற்குள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டும், ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்.
இதையடுத்து, இருவரின் சடலங்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இருவரும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 27 வயதான சரவணக்குமார் மற்றும் 19 வயதான ஸ்ரீமதி ஆகிய இருவருக்கும் கடந்த ஓராண்டிற்கு முன்பு காதல் திருமணம் நடந்தது தெரியவந்துள்ளது.
காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும், திருப்பூர் கருமாரம்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். திருப்பூரில் உள்ள வெல்டிங் ஒர்க்ஷாப் ஒன்றில், சரவணக்குமார் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் பி.எஸ்சி நர்சிங் படித்து முடித்துவிட்டு, ஸ்ரீமதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சரவணக்குமாரின் வருமானம் போதுமானதாக இல்லாததால் தனது மனைவியை வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அது மட்டும் இல்லாமல், ஸ்ரீமதியின் நடத்தையில் சரவணக்குமாருக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதன் காரணமாகவும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படுவது உண்டு. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சரவணக்குமார் மனைவியை பூரிக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார்.
மேலும், மனைவியின் சடலத்தை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார். ஸ்ரீமதியின் உடலில் பூரிக்கட்டையால் தாக்கிய காயமும் இருந்துள்ளது. மேலும், அவர் நேற்று முன்தினம் மதியம் வரை வீட்டிற்கு வெளியே நடமாடியுள்ளார். அதன் பிறகு சரவணக்குமார் வெளியில் வரவில்லை என்று அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், சரவணக்குமார் நேற்று முன்தினம் மதியத்திற்கு பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம். ஸ்ரீமதி இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆனதால் அவர் உடல் அழுகி கிடந்ததுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், 3 மாத கர்ப்பமாக இருந்த தனது மனைவியை சரவணக்குமார் தினமும் குடித்து விட்டு வந்து சித்திரவதை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், வழக்கம் போல் கடந்த வாரம் சரவணக்குமார் குடித்து விட்டு வந்து தனது மனைவியை கொடூரமாக தாக்கியதில் ஸ்ரீமதி 1ம் தேதியே வீட்டிற்குள் உயிரிழந்துள்ளார். ஆனால் சரவணக்குமார் எதுவும் நடக்காதது போல், உடலை வீட்டிற்குள்ளேயே போட்டு விட்டு கடந்த 3 நாட்களாக வழக்கம் போல் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், மனைவியின் உடல் அழுகி துர்நாற்றம் வீசியதால் தாம் சிக்கிக்கொள்வோம் என பயத்தில் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: பெண்களே கவனம்!! நண்பன் கொடுத்த ஜூஸைக் குடித்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!



