தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் வழியாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காகத் திட்டமிடப்பட்ட பாமாயில் டெண்டர் ஒதுக்கீட்டு நடவடிக்கைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பின் அடிப்படையில், சுமாராக 600 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. இதில் தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 8 அன்று நான்கு நிறுவனங்களுக்குப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
எனினும், இந்த டெண்டர் இறுதிச் செயல்பாடுகளில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கூறி, டெண்டரில் பங்கேற்ற ‘கேடிவி ஹெல்த் புட்’ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாமாயில் டெண்டர் ஒதுக்கீட்டுக்குத் தடை விதித்ததுடன், இது குறித்து விரிவான விளக்கமளிக்குமாறு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.



