தூக்கத்தில் இருந்த பயணிகள்.. திடீரென பற்றி எரிந்த பேருந்து; 9 பேர் உயிரிழப்பு!

ee19968228099ac2c7c6ad09cf85fa2842826da3a048c9ef02b8bf1523d229a5

யமுனா விரைவுச்சாலையில் அதிகாலை நேரத்தில் சென்று கொண்டிருந்த ஸ்லீப்பர் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பெண் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கத்தில் இருந்ததால், தீப்பற்றியதும் அவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் இருந்து மஹோபா நோக்கி 34-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. யமுனா விரைவுச்சாலையில் அதிகாலை நேரத்தில் பேருந்தில் திடீரென தீப்பற்றியது. சில நிமிடங்களிலேயே தீ பேருந்து முழுவதும் வேகமாகப் பரவியது.

பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், தீயில் இருந்து தப்பிக்க பலர் ஜன்னல்கள் வழியாக வெளியேற முயன்றனர். சிலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பேருந்தில் இருந்து கீழே குதித்தனர். பேருந்துக்குள் புகை சூழ்ந்ததால் பயணிகள் வெளியேறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மின்கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தீ விபத்தில் இருந்து தப்பிய பயணி ஒருவர் கூறிய அனுபவம் சம்பவத்தின் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளது. தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ கதவை பலமாகத் தட்டியதாகவும், கண் விழித்தபோது பேருந்துக்குள் ஏற்கனவே புகை சூழ்ந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். உடைமைகள் எதையும் எடுத்துக்கொள்ள முடியாமல் செல்போனை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறியதாகவும் கூறினார்.

பேருந்துக்குள் புகை அதிகமாக இருந்ததால் எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மூச்சுத்திணறலுக்கு மத்தியில் பயணிகள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு வெளியேற முயன்றனர். சிலர் மற்ற பயணிகளை வெளியே இழுத்து காப்பாற்றினர்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் இருந்த 30 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

விபத்து குறித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: இனியும் இவனை வளர்க்க முடியாது..! மகனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய தாய்..! பரபரப்பு உத்தரவு..!

Saranya

Next Post

ரூ.1,020 கோடி டெண்டர் வழக்கு.. விமான நிலையத்தில் சிக்கிய கவி பிரசாத்; நடந்தது என்ன?

Fri Sep 25 , 2026
ரூ.1,020 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கில் முக்கியமான திருப்பமாக, வெளிநாடு செல்ல முயன்ற கவி பிரசாத் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளரான கவி பிரசாத், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ள 13 பேரில் ஒருவராக உள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை நடைபெற்ற அரசு டெண்டர்களில் ரூ.1,020 […]
arrest1

You May Like