போதைப் பொருள் நடமாட்டத்தை, தமிழ்நாடு காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக ஆட்சியில்தான் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 52 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், ஏதாவது ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டதா? திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.350 கோடியில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, இன்றைக்கு திருப்பூர் தொழிலாளர்கள் பயன்பெறுகிறார்கள். திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியிலோ அல்லது திருப்பூர் மாநகருக்குள்ளோ திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் ஏதேனும் கொண்டுவரப்பட்டுள்ளதோ.
திமுக எப்போதோல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் – ஒழுங்கு சீர்கெடும். போதைப்பொருள் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி, சூன்யமாகிக் கொண்டிருக்கிறது. இது தான் திமுகவின் சாதனை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது என அதிமுக சார்பில், சட்டப்பேரவையில் கவனத்துக்கு கொண்டுவந்தோம். ஆனால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. போதைப் பொருள் நடமாட்டத்தை, தமிழ்நாடு காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. கொங்கு மண்டலத்தில் முதியோர் தாக்கப்பட்டு, அவர்களது உடைமைகள் களவாடப்படுகின்றன.
முதல்வர் ஸ்டாலின் பெற்ற, ’முதல்வரின் முகவரி’ திட்டத்தில் 9 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தற்போது ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் துவங்கப்பட்டு, மனுக்கள் பெறப்படுகிறது. திமுக அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றினோம். திருப்பூர் மாநகருக்கு 4ம் குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு தான் நிறைவேற்றியது. என்றார்.