தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்ற தவெக தலைவர் விஜய், பதவியேற்பு விழா மேடையிலேயே மக்கள் நலன் சார்ந்த 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அதிரடி தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் முன்னிலையில் பதவியேற்ற விஜய், பின்னர் மேடையிலேயே முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் உரையாற்றினார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் முன்னிலையில் பேசிய விஜய், “நான் ஒன்னும் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் இல்லை. ஒரு சாதாரண உதவி இயக்குநரின் மகனாக வாழ்க்கையை தொடங்கிய நான், இன்று தமிழக முதலமைச்சராக உங்கள் முன்னால் நிற்கிறேன்” என கூறினார். இந்த வார்த்தைகளை கேட்ட தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்து பேசிய விஜய், “தமிழ்நாட்டின் நிலைமை தற்போது மிகவும் சவாலானதாக உள்ளது. கஜானா காலியாக இருக்கிறது. 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் உண்மையான நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என தெரிவித்தார்.
மேலும், “எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அதே நேரத்தில் இந்த பொறுப்பை நிறைவேற்ற எனக்கு கொஞ்சம் அவகாசத்தையும் தர வேண்டும்” என மக்களிடம் நேரடியாக கேட்டுக்கொண்டார். அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்த மற்றொரு முக்கிய கருத்தாக, “முகத்தை மூடிக்கொண்டு யாரையும் சென்று சந்திக்க மாட்டேன். மக்களாகிய உங்களுக்கு தெரியாமல் எந்தவொரு சந்திப்பையும் நடத்த மாட்டேன்” என விஜய் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, “இங்கு விஜய் தலைமையிலான ஒரே ஒரு பவர் சென்டர் தான் இருக்கும். வேறு எந்தவொரு பவர் சென்டரும் இல்லை” என கூறியதும், அரங்கம் முழுவதும் தவெக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தவெக அரசுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் விஜய் தனது நன்றியை தெரிவித்தார். “இந்த அரசை அமைக்க ஆதரவு அளித்த அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் மனமார்ந்த நன்றி” என அவர் கூறினார்.
இறுதியாக தனது உரையை முடிக்கும்போது, “மீண்டும் சந்திக்கும் வரை… இல்லை இல்லை… மீண்டும் மீண்டும் சந்திப்போம்… அதுவரை நன்றி, வணக்கம்” என கூறி உரையை நிறைவு செய்தார். விஜயின் இந்த நிறைவு வரிகள் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.



