ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கின்றார்கள் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை: “தமிழகத்தில் வேளாண்மைத் துறை அதிகாரிகளை, விவசாய பணிகளை தவிர அனைத்து வேலைகளையும் பார்க்க வைக்கின்றனர். ஆட்சியாளர்கள் விவசாயத்தை முன்னுரிமை படுத்துவதில்லை. தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவையில் வரும் நவம்பர் 19-ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்க பிரதமர் மோடி வரும் அன்றைய தினம் கோவை வருகிறார். இம்மாநாட்டில் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட இயற்கை விவசாயிகளையும், 50-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளையும் பிரதமர் சந்திகின்றார்.
இந்தியாவில் முதல் முறையாக டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை படித்தவர்கள் செய்துள்ளனர். குஜராத்தை சேர்ந்த மருத்துவக் குழு ஹைதாராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்கள் தொடர்புடைய ஒரு மருத்துவ குழுவும். பயங்கரவாத செயலில் ஈடுபட்டு டாக்டர் குழுவினர் கைது செய்யபட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. டாக்டர்கள் என்பதால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என அவர்கள் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். நவ.26-ல் மும்பையில் நடந்ததைப் போல செய்ய வேண்டும் என்பது தான் இலக்கு என சொல்லியிருக்கின்றனர். இது அபாயகரமானது.
நாட்டுக்குள் உற்பத்தியாகும் தீவிரவாதம் நமக்கு தேவை இல்லை. மதத்தை தவறாக பயன்படுத்தி இதை செய்கின்றனர். 13 பேர் உயிரிழந்து இருப்பது மோசமான தாக்குதல். ஐந்து மாநிலங்களில் இந்த குழுவினருக்கு தொடர்பு இருக்கும் நிலையில் அரசியல் கடந்து இந்த தீவிரவாத குழுவை வேருடன் அழிக்க அனைத்து அரசியல் கட்சியினரும் முன்வர வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சிறப்பாக இருக்கின்றனர். ஆனாலும் கோவை, சேலம் பகுதிகளில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. முதல்வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். தனி கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் ஆபத்து அதிகம் என்றார்.
மேலும் கர்நாடகாவில் ரியல் எஸ்டேட் செய்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்; நான் ரியல் எஸ்டேட் செய்வதில் என்ன தவறு. என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன், நான் தொழில் செய்கிறேன் யாரையும் அடித்து பிடுங்கவில்லை. நான் எந்த தொழிலும் செய்யக் கூடாது என கையை கட்டி போட்டு வைத்தால் நான் எங்கிருந்து சாப்பிடுவேன். செய்யும் வேலைகளில் தவறு இருந்தால் சொல்லலாம். ஆனால், எந்த தொழிலும் செய்ய கூடாது என சொல்ல யாருக்கு உரிமை இல்லை. கட்சியில் மாநில தலைவராக நான் இல்லை. எனக்கு நேரம் இருக்கிறது. என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நியாயமான முறையில் தொழில் செய்து அரசியல் செய்கிறேன், குடும்பத்தையும் நடத்து கின்றேன். பங்குச்சந்தையில் பணம் போடுகின்றேன். தொழிலே செய்யக்கூடாது என்பது என்ன நியாயம், நான் என்ன சாராய கம்பெனியா நடத்துகின்றேன்?
நான் தொழில் செய்தால் தான் சாப்பிட முடியும் எனவும், கட்சிப் பணிகளுக்கு சொந்த காசில் தான் செலவு செய்கின்றேன். ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கின்றார்கள். நான் அப்படி எதுவும் சேர்க்கவில்லை என தெரிவித்தார். முதல்வர் என்ன தொழில் செய்கின்றார் அவருக்கு பணம் எங்கிருந்து வருகின்றது. ரூ.5 லட்ச ரூபாய் பங்கு தொகையாக தொழிலில் போட கூட முடியாத அளவிற்கா நான் இருக்கின்றேன். நிறுவனங்களில் பங்கு தொகை இரண்டு லட்சம் வரை முதலீடு செய்து இருக்கின்றேன். ஆன்லைனில் கம்பெனிகளில் எவ்வளவு பங்கு முதலீடு என்பதை பாருங்கள். அந்த அளவிற்கு கூட தகுதி இல்லாமலா இருக்கிறேன் என்றார்.



