மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஷீத்லா மாதா கோயில் அருகே பக்தர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதிய கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் சாலையில் திரண்டிருந்தபோது, நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது.
சினோர் பகுதியிலிருந்து வந்த அந்த லாரி, கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த சரிவான சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அமைத்திருந்த தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு சென்ற லாரி, சாலையில் இருந்த பக்தர்கள் மீது மோதியதுடன் கோயிலின் நுழைவாயில் மற்றும் வெளிப்புறச் சுவரிலும் மோதி நின்றது.
இந்த விபத்தில் காயமடைந்த 39 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 முதல் 6 பேர் வரை எலும்பு முறிவு உள்ளிட்ட பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்களுக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் பணியில் இருந்த இரண்டு போலீசாரும் காயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மீட்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ருச்சிகா சவுகான் தெரிவித்துள்ளார். நவராத்திரி விழாவை முன்னிட்டு அந்தச் சாலையில் போலீஸ் சோதனைச் சாவடியும் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தடை செய்யப்பட்ட பாதைக்குள் லாரி எவ்வாறு நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், லாரி திடீரென இடதுபுறமாகத் திரும்பியதற்கான காரணத்தைக் கண்டறிய வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மூலம் வாகனத்தின் தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் உடல்நிலையை மதிப்பிடுவதற்காக சிடி ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், லாரியில் அளவுக்கு அதிகமாக நெல் ஏற்றப்பட்டிருந்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரக் கடைகள் மற்றும் அங்கிருந்தவர்கள் மீது மோதியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் தனது சகோதரரும் காயமடைந்ததாகக் கூறிய அவர், சம்பவ இடத்தில் தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவியதாகவும் தெரிவித்துள்ளார்.
நவராத்திரி விழாவையொட்டி கோயிலில் பக்தர்கள் திரண்டிருந்த நேரத்தில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா? உடைத்த திருமாவளவன்! அதிர்ச்சியில் முதல்வர் விஜய்!



