பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான தனது உரையை மக்களவையில் தொடங்கினார். அவர் பேசுகையில், இது நமக்கு ஒரு பாக்கியமான தருணம். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் இந்த மகத்தான வாய்ப்பை நழுவ விடக்கூடாது. நாம் ஒன்றிணைந்து நாட்டிற்கு ஒரு புதிய திசையை அளிக்கப் போகிறோம்.
21 ஆம் நூற்றாண்டில், இந்தியா ஒரு புதிய தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. இன்று உலகில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்தை நாம் அனைவரும் உணர்கிறோம். இது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம். நாட்டின் மக்கள் தொகையில் 50% பெண்கள் உள்ள நிலையில், கொள்கை உருவாக்கத்தில் அவர்களின் பங்கு அவசியம் என வலியுறுத்திய அவர், பெண்கள் அரசியலில் அதிக அளவில் பங்கேற்பது காலத்தின் தேவை என்றும் கூறினார்.
மேலும், இந்த எண்ணம் 25–30 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாகவும், அதனை செயல்படுத்த தாமதமானது உண்மை எனவும் அவர் ஒப்புக்கொண்டார். “காரணம் எதுவாக இருந்தாலும், இந்த தாமதத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது அதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார். அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், ஒரு கட்சியைத் தவிர பெரும்பாலானவர்கள் கொள்கை ரீதியான எதிர்ப்பை வெளியிடவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட மோடி, எதிர்ப்புகள் அரசியல் நோக்கத்துடன் இருப்பதாகவும் அவர் சாடினார். மூன்று நாள் சிறப்பு அமர்வில் இந்த மசோதாவை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை வழங்கும் இந்த முயற்சி, பாலின சமத்துவத்தை நோக்கிய “வரலாற்றுச் சிறப்புமிக்க படி” என பிரதமர் வலியுறுத்தினார். “நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அளிக்கும் மரியாதையே நாட்டிற்கு அளிக்கும் மரியாதை” எனக் கூறிய அவர், நாட்டின் சட்ட அமைப்பில் பெண்களின் பங்கை வலுப்படுத்த மத்திய அரசு உறுதியாக செயல்படும் என தெரிவித்தார்.
Read more: Post Office | ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ. 20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கு சூப்பர் திட்டம்..!



