சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (39). அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த 34 வயதுடைய பெண் ஒருவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதன் காரணமாக மாதையன் அடிக்கடி அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண்ணின் 16 வயது மகள் கடந்த மூன்று வாரங்களாகப் பள்ளிக்குச் செல்லாமல் தொடர்ந்து வீட்டிலேயே முடங்கியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த தாய் மகளிடம் கனிவாக விசாரித்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், கடந்த 4 மாதங்களாக தன்னை மாதையன் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் அச்சிறுமி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், இக்கொடூரத்தை வெளியே சொன்னால் தாயைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துரிதமாக செயல்பட்ட போலீஸார், மாதையன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாதையன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



