ஜார்கண்ட் மாநிலத்தில், பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் மர்மநபர்களால், சுட்டு கொடூரமான முறையில், கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் காரணமாக, அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்ததால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில், லதேஹர் ஜிவா பரிஷத்தின் முன்னாள் துணைத் தலைவரான ராஜேந்திர பிரசாத் சாஹு என்பவர், கடந்த சனிக்கிழமை மாலை பாலுமத் பகுதியில் உள்ள டூன் பள்ளிக்கு அருகே நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த, மர்ம நபர்கள் சிலர், அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பின்னர், அவர், ராஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு, இடுப்பு, வயிறு மற்றும் கால் போன்ற பகுதிகளில், குண்டு பாய்ந்ததால், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவருடைய ஆதரவாளர்கள், சாலை மறியலில் ஈடுபட்டு, டயர்களை எரித்து போராட்டத்தில் குதித்தனர். ஆகவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.