2026 தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது.. திமுக – அதிமுக இடையே கடும் போட்டி.! விஜய் கிங் மேக்கரா..? பரபர சர்வே முடிவுகள்..!

Stalin EPS Vijay 2

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் களைகட்ட தொடங்கி உள்ளது.. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.. அதன்படி இதுவரை வெளியான பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் Matrize நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியானது.. அந்த கருத்துக்கணிப்பில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி கடும் போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ கூட்டணி 107 முதல் 120 தொகுதிகளை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 102 முதல் 115 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அரசியலில் புதிதாக களமிறங்கி உள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 5 முதல் 12 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .. பிற கட்சிகள் 1 முதல் 6 தொகுதிகளை கைப்பற்றக்கூடும் என்று Matrize கருத்துக்கணிப்புத் முடிவுகள் தெரிவிக்கின்றன…

வாக்கு சதவீதம் எவ்வளவு..?

என்.டி.ஏ கூட்டணியின் வாக்கு சதவீதம் சுமார் 40 சதவீதமாகவும், திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 38 சதவீதமாகவும் இருக்க வாய்ப்புள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தவெகவின் வாக்கு சதவீதம் 16 சதவீதமாக இருக்கும் என்றும், பிற கட்சிகள் சுமார் 6 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு கணித்துள்ளது..

தென் மாவட்டங்களில் என்.டி.ஏ கூட்டணி 24 முதல் 26 தொகுதிகள் வரை கைப்பற்றக்கூடும் எனவும், திமுக கூட்டணி 22 முதல் 24 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது..

தென் மாவட்டங்களில் தவெக 0 முதல் 2 இடங்கள் வரையிலும், பிற கட்சிகள் 0 முதல் 2 தொகுதிகள் வரை வெற்றிபெறக்கூடும் என்று Matrize கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மொத்தம் 47 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட காவிரி டெல்டா பகுதியில், என்.டி.ஏ கூட்டணி 22 முதல் 25 இடங்கள் வரையிலும், திமுக கூட்டணி 21 முதல் 24 இடங்கள் வரையிலும், தவெக 1 முதல் 3 இடங்கள் வரையிலும், பிற கட்சிகள் 0 முதல் 1 இடம் வரையிலும் கைப்பற்றக்கூடும்.

சென்னை மண்டலத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்டணி 16 முதல் 19 இடங்கள் வரையிலும், என்.டி.ஏ கூட்டணி 12 முதல் 15 இடங்கள் வரையிலும், தவெக 4 முதல் 7 இடங்கள் வரையிலும், பிற கட்சிகள் 0 முதல் 1 இடம் வரையிலும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணிப்புகள் உண்மையானால் திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது.. தவெகவுக்கு ஒருவேளை 12 தொகுதிகள் கிடைத்தால் யாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கிங் மேக்கராக விஜய் இருப்பார்.. எனினும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் எந்தளவு உண்மையாகும் என்பது மே4-ம் தேதி தெரிந்துவிடும்..

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது..

திமுக கூட்டணியில் (DMK+) காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) மற்றும் பிற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

2016 சட்டமன்ற தேர்தல்

2016 தமிழகத் தேர்தல்களில், அதிமுக தனித்து 134 இடங்களை வென்று பெரும்பான்மையைப் பெற்றது. திமுக 89 இடங்களை வென்றது. திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த நிலையில், 2016 தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் அதிமுக தொடர்ச்சியாக 2-வது முறையாக ஆட்சி அமைத்தது..

2021 சட்டமன்ற தேர்தல்

2021 சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை, திமுக 133 இடங்களை வென்று அமோக வெற்றி பெற்றது; இதன் மூலம் அதிமுக தலைமையிலான கூட்டணியின் ஆட்சியை முடிவுக்கு வந்தது.. திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) ஆகியவை முறையே 18 மற்றும் 4 இடங்களை வென்றன. மறுபுறம், அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றது. பாமக 5 இடங்களை வென்றது. பாஜக 4 தொகுதிகளைக் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : “TVK-வா.. இங்க வந்து டீ வித்துட்டு போ.. தற்குறிகள்..” பரப்புரையில் தவெகவினரை வெளுத்துவிட்ட சீமான்..!

RUPA

Next Post

பழங்கள் மேல இருக்கிற ஸ்டிக்கர் விஷத்திற்கு சமம்! சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? FSSAI எச்சரிக்கை!

Tue Apr 7 , 2026
Why You Must Remove Fruit Stickers Before Eating, Hidden Health Risks Revealed
fruit sticker

You May Like