செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருளான க்ரோக் வழங்கிய ஒரு பதில் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் வைரலையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பயனர், “நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?” என்ற கற்பனை கேள்வியை எழுப்பிய நிலையில் இந்த விவகாரம் தொடங்கியுள்ளது.
அந்த கேள்விக்கு பதிலளித்த க்ரோக், இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பு, UPI பணப்பரிவர்த்தனை விரிவாக்கம் மற்றும் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ள நிலை போன்றவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முன்னேற்றங்களை ஆதரிப்பதாக அது கருத்து தெரிவித்தது.
மேலும், அந்த உரையாடலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் ஒப்பீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதில், சமூக நலத் திட்டங்கள் முக்கியமானவை என்றாலும், வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகளாவிய பொருளாதார நிலை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. “குடும்ப அரசியலை விட தரவுகள் முக்கியம்” என்ற சொற்றொடர் அந்த பதிலில் இடம்பெற்றதாகவும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
இந்த பதில் வெளியானதும் X தளத்தில் (முன்னர் ட்விட்டர்) பயனர்கள் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினர். சிலர் இதை செயல்திறன் மற்றும் வளர்ச்சி அடிப்படையிலான பார்வை என பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் செயற்கை நுண்ணறிவு அரசியல் கருத்துகளில் பாரபட்சம் காட்டக்கூடும் என கவலை தெரிவித்துள்ளனர்.
xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு X Corp தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட க்ரோக், நேரடி தரவுகளையும் சமூக ஊடக போக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சில நேரங்களில் அதன் பதில்கள் இணைய விவாதங்களின் தாக்கத்தையும் பிரதிபலிக்கக்கூடும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read more: சென்னை வந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. பயணிகளின் நிலை என்ன..?



