சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகர் இன்று தேர்வானார்.. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.. அந்த வகையில் எதிர்கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்தார். அவர் பேசுகையில், “17-வது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எனது முதல் உரை இது. இவ்வேளையில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த 1.54 கோடி தமிழ்நாடு மக்களுக்கு நன்றி.
புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், கலகலப்பான பேச்சுகளுடன் கருத்து தெரிவித்தார். உரையின்போது, “முதலமைச்சரும் நானும் ஒரே காலேஜ் தான்… ஆனால் அரசியல் நடத்துவதில் திமுக தான் சீனியர்” என்று உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாக குறிப்பிட்டார். அரசியல் ஆலோசனைகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “அவைத் தலைவரை கோபப்படுத்தும் வகையில் நாங்கள் செயல்பட மாட்டோம்.
எங்கள் இருவரையும் கைப்பிடித்து கோபப்படாமல் நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறி அவையில் மீண்டும் சிரிப்பலையை ஏற்படுத்தினார். இதை கேட்ட விஜயும் சிரித்தார். முதலமைச்சர் விஜய் நேற்று அனைத்து மூத்த அரசியல் தலைவர்களையும் நேரில் சந்தித்தது குறித்து குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், அந்த அரசியல் மாண்பும் நாகரிகமும் சட்டப்பேரவையிலும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசியல் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்மொழி மற்றும் தமிழர் மரபுகளுக்கு அரசு தொடர்ந்து மரியாதை அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், இந்த முறை சட்டமன்றத்தில் அதிக அளவில் பெண் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டார். பெண்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிப்பது ஜனநாயக வளர்ச்சிக்கான நல்ல அறிகுறி என்றும் அவர் தெரிவித்தார்.



