ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணித்த மூன்று வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என கூறிய அமெரிக்கா, அதற்கு பதிலடியாக ஈரானின் 80-க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச வர்த்தக கப்பல்கள் வழக்கம்போல் பயணித்து வந்தன.ஆனால்,நேற்றைய தினம் 3 வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலுக்கு காரணம் ஈரான் தான் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளை ஈரான் மீறி வருவதாகவும் கூறி, அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என எச்சரித்திருந்தது.
இதுபற்றி அமெரிக்காவின் மத்திய கட்டுப்பாட்டு மையம் (CENTCOM) கூறுகையில், ”ஈரானில் 80க்கும் அதிகமான இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளோம் . ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள், கடலோர ரேடார் நிலையங்கள், கட்டுப்பாட்டு மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹார்முஸ் ஜலசந்தியில் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் பணிக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும், ஈரான் புரட்சிகர காவல் படைக்கு சொந்தமான 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகளும் இலக்காக வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.மேலும், பத்து நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை விட இது நான்கு முதல் ஐந்து மடங்கு பெரிய அளவிலான நடவடிக்கையாகும்” என்று கூறப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டாலோ அல்லது சர்வதேச கடல் போக்குவரத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, அதற்கு பதிலளிக்க அமெரிக்கப் படைகள் முழுமையாக தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த தாக்குதல் குறித்து ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இருப்பினும், நாட்டின் தெற்கு பகுதிகளான பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் கெஷ்ம் தீவு உள்ளிட்ட பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், அமெரிக்காவின் எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் உரிய பதிலடி வழங்கப்படும் என்று ஈரான்அதே நேரத்தில், அமெரிக்காவின் எந்தவொரு ராணுவ நடவடிக்கைக்கும் உரிய பதிலடி வழங்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.



