தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்கள் தலா ரூ.800 வீதம் வாங்கியதில் நிதி முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், அதற்கான செலவினங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராகவ் பாலாஜி மீது தமிழ்நாடு பொது விநியோக திட்ட ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பால்ராஜ் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், “இணைப்பதிவாளர் பொறுப்பேற்றது முதல் கூட்டுறவு சங்க ஊழியர்களை மிரட்டி மாதந்தோறும் முறைகேடாகக் கமிஷன் வசூலித்து வருகிறார்.
தற்போது கூட்டுறவு கடைகளில் மாட்டுவதற்காக வாங்கப்படும் முதல்வர் விஜய்யின் புகைப்படங்களுக்கு சந்தை மதிப்பை விட மிகக் கூடுதல் தொகையை குறிப்பிட்டு பெரும் ஊழல் செய்துள்ளார். இதுகுறித்து உயரதிகாரியிடம் புகார் அளித்தால், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியின் கீழ் பணியாற்றும் அலுவலரையே விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். எனவே, கூட்டுறவுத்துறை செயலர் அல்லது தலைமைப் பதிவாளர் தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மூலம் சிறப்பு அதிகாரிகளை நியமித்து மனுதாரரின் புகார் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், முதல்வர் புகைப்படங்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முழு செலவு விவரங்கள் குறித்தும் விரிவாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Read More : BIG BREAKING | செப்.1ம் தேதி மேட்டூர் அணை திறப்பு..!! தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!



