காலையில் கண் விழித்தவுடன் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்றும், உணவுக்கு முன் தண்ணீர் குடித்தால் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என்றும் சமூகத்தில் பரவலான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஆனால், இவற்றில் எது அறிவியல் உண்மை, எவை தேவையற்ற மிகைப்படுத்தல்கள் என்பது குறித்துக் கொச்சி ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையின் உள் மருத்துவ நிபுணர் டாக்டர் வினோத் சேவியர் விரிவான மருத்துவ விளக்கங்களை அளித்துள்ளார்.
காலையில் எழுந்தவுடன் லிட்டர் கணக்கில் கட்டாயப்படுத்தித் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிடும் டாக்டர் வினோத், இரவு நேரத் தூக்கத்தின்போது உடலில் ஏற்படும் இயல்பான நீர் இழப்பை சரிசெய்ய மிதமான அளவில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதே போதுமானது என்கிறார். அதேபோல் தண்ணீரின் வெப்பநிலையைப் பொறுத்து உடல் அதை வித்தியாசமாக உறிஞ்சுவதில்லை; வயிறு தனக்குள் செல்லும் திரவங்களை உடலின் வெப்பநிலைக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்கிறது. எனினும், வழக்கமான அறை வெப்பநிலையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு மிகவும் இதமாகவும் செரிமானத்திற்கு உகந்ததாகவும் இருக்கும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பகலில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்குத் தலைவலி, வாய் வறட்சி மற்றும் இரவில் தாகத்தால் தூக்கம் தடைபட வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், தூங்குவதற்குச் சற்று முன்பாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் நள்ளிரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிட்டுத் தூக்கம் பாழாகும்; எனவே நாள் முழுவதும் சீரான இடைவெளியில் நீரேற்றத்தைத் தக்கவைப்பதே சிறந்தது. உணவருந்துவதற்கு முன் தண்ணீர் குடிப்பது பசியைக் கட்டுப்படுத்தி அதிகக் கலோரி எடுப்பதைத் தடுத்து வயிறு நிரம்பிய உணர்வைத் தருமே தவிர, அது வளர்சிதை மாற்றத்தைத் தூண்டிக் கொழுப்பைத் தானாக எரிக்காது என்றும், சாப்பிடும்போது அளவுக்கு அதிகமாக நீர் அருந்தினால் வயிறு உப்பசம் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
வெப்பம் மிகுந்த கார்களில் நீண்ட நேரம் வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரை குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது; வெப்பத்தால் பிளாஸ்டிக் ரசாயனங்கள் தண்ணீரில் கசிய வாய்ப்புள்ளது. செம்புப் பாத்திரத்தில் இரவு முழுவதும் சேமித்த நீரைப் பருகுவது பாதுகாப்பானது என்றாலும், மிக நீண்ட நாட்கள் அதிலேயே வைத்திருந்தால் அதிகப்படியான செம்பு கலந்து குடல் உபாதைகள் வரலாம்.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது தொற்று பாதிப்புகளின்போது உடலில் நீர் மற்றும் எலக்ட்ரோலைட் இழப்பு அதிகம் ஏற்படுவதால் ஓஆர்எஸ், இளநீர் போன்றவற்றை எடுப்பது அவசியம். சிறுநீரகக் கற்களைத் தவிர்க்க விரும்புபவர்கள் தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் நீர் குடிப்பது இரவில் சிறுநீரின் அடர்த்தியை குறைத்துத் தாதுக்கள் படிவதை தடுக்கும் என்றாலும், நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஒட்டுமொத்த திரவ அளவை முறையாக பராமரிப்பதே முதன்மையானது என டாக்டர் வினோத் சேவியர் அறிவுறுத்தியுள்ளார்.
Read More : வணிகர்களுக்கு குட் நியூஸ்! ஜிஎஸ்டி கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி! புது ரூல்ஸை அறிவித்த நிர்மலா சீதாராமன்!



