துஷ்ட சக்தியாக மாறிய தூய சக்தி.. குதிரை பேரம் நடத்தி அதிமுகவின் முதுகில் குத்திய தவெக.. விளாசிய இபிஎஸ்..!

1332588

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது.. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது… இதனால் எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு அதிமுக மாறிவிட்டது.. இந்த தேர்தலில் 3-வது அதிமுக தள்ளப்பட்டது.. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்.. மேலும் சி.வி சண்முகம், எஸ்.பி. வேலுமணியில் தலைமையில் ஒரு அணியும், இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் என அதிமுக பிளவுபட்டுள்ளது..


இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 1972-ஆம் ஆண்டு திமுக-விற்கு எதிராக ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ மக்களின் பேராதரவுடன் தொடங்கப்பட்டது. புரட்சித் தலைவர் உருவாக்கிய கட்சியை இரும்புக் கோட்டையாக மாற்றியவர் புரட்சித் தலைவி அம்மா. புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி மற்றும் அம்மா வழி ஆட்சி என 31 ஆண்டு காலம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து ஏழைகளைக் காத்து ஏழ்மையை ஒழித்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில் துறை என அனைத்துத் துறைகளிலும் தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கிய பெருமை கழக அரசுக்கு உண்டு.

‘காய்த்த மரம்தான் கல்லடி படும்’. அப்படித்தான் எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கம்பீரமான ஆலமரத்தின் நுனிக் கிளையில் சிலர் அமர்ந்துகொண்டு அடி மரத்தையே வெட்டி சாய்க்கப் பார்க்கிறார்கள். அவர்கள்தான் கீழே விழுந்து உருக்குலைந்து போவார்களே தவிர, ஆலமரத்திற்கு எந்தத் தீங்கும் வராது.

தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் இதுபோன்ற தேர்தல் பின்னடைவுகளை சந்தித்து, மீண்டு வந்தவர்கள்தான். அதிகாரம் இருந்தால் மட்டுமே கட்சியில் இருக்க முடியும் என்ற நிலையில் நம் இயக்கத்தின் கோடான கோடி தொண்டர்கள் ஒருபோதும் இருந்ததில்லை.

புரட்சித் தலைவர் மறைவுக்குப் பிறகும், அம்மா மறைவுக்குப் பிறகும், இந்த இயக்கத்தை அழிக்க எதிரிகள் எத்தனையோ வழிகளில் முயற்சி செய்தார்கள். அனைத்து சூழ்ச்சிகளையும் தொண்டர்களின் உறுதுணையோடு முறியடித்து, அம்மா வழியில் பொற்கால ஆட்சி நடத்தினோம்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான், இன்று தொண்டர்களாலும், நிர்வாகிகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறேன். நாளை, எனக்குப் பின் தகுதியுள்ள வேறு ஒருவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்துவார். இதுதான் நம் கட்சிக்கு மட்டுமே இருக்கும் தனிப்பெருமை.
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் வெல்லவில்லை என்பது உண்மை. அதேநேரம், நாம் முழுமையாக வெற்றி வாய்ப்பை இழக்கவுமில்லை.

நாம் 21.21 சதவீத வாக்குகள் அதாவது தனித்து 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 வாக்குகளும், கூட்டணியோடு சேர்ந்து சுமார் 1 கோடியே 34 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தான் 47 சட்டமன்றத் தொகுதிகளும், கூட்டணி கட்சிகள் 6 தொகுதிகளும் என, மொத்தம் 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.

மக்கள் விருப்பத்தையும், நமது பின்னடைவையும் நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம், இந்த தோல்வியைக் கண்டு நாம் கொஞ்சமும் துவளவில்லை. ஏனென்றால், இது நிரந்தரமில்லை. பதவி இல்லாமலும், மக்களுக்காகப் போராடும் இயக்கம் இது. தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் இயக்கம் இது. தோல்விகளை வெற்றியாக்கி, ஆட்சியைப் பிடிக்கும் இயக்கம் இது.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தத் தேர்தலில் எந்தஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் மக்கள் முழு ஆதரவையும், பெரும்பான்மையையும் கொடுக்கவில்லை. எனவே, தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதே நேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது.

பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள்.

ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு பொய்க்கால் குதிரை ஆட்சியை அமைத்துவிட்டது.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. இப்போதும் நமக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அரசியலில் அவ்வப்போது சில புயல்கள் வந்துபோகும். அந்தப் புயல்களையெல்லாம் தாங்கியும், தாண்டியும் நிற்கும் ஆயிரம் காலத்து பயிர் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். கழக நிறுவனர் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா காலம் முதல் இன்றுவரை இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், அவர்கள் திருந்தினால் தாயுள்ளத்துடன் மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் தெரியும்.

அவர்களின் வழிகாட்டுதல்படியே இன்றும் நாம் செயலாற்றி வருகிறோம். நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான்.

கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும். ஒளிமயமான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது. விட்டில் பூச்சியாக வீழ்ந்து விடாதீர்கள். அனைவரும் ஒன்று கூடுவோம். மக்கள் எதிர்பார்க்கும் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ ஆட்சியை அமைப்போம். நாளை நமதே! இந்த நாடும் நமதே!..” என்று குறிப்பிட்டுள்ளார்..

English Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has released a detailed statement regarding the defeat in the Assembly elections.

RUPA

Next Post

“எடப்பாடி பழனிசாமியே பதவியில் இருந்து விலகிவிடு, இல்லை என்றால்..” சொந்த மாவட்டத்திலேயே இபிஎஸ்-க்கு எதிரான போஸ்டர்கள்.. பரபரப்பு..!

Tue May 19 , 2026
Currently, posters demanding Edappadi Palaniswami's resignation have been pasted in various parts of Salem city.
eps posters

You May Like