பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இருவருக்குள் ஏற்பட்ட கள்ளக்காதல் பிரச்சினை, இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததாக சந்தேகித்த நண்பரை, வழிமறித்து மிளகாய்ப்பொடி தூவி ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் பகுதியில் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (62). பாக்குமட்டை வியாபாரம் செய்து வந்த இவர், உள்ளூர் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது மனைவி ஏற்கனவே விபத்தில் உயிரிழந்துவிட்டார். நாகராஜுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இதே பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (65). மார்க்கெட்டில் வேலை செய்து வரும் இவரது மனைவி பாக்கியா (58). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். நாகராஜும் கந்தசாமியும் சுமார் 40 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இரு குடும்பத்தினரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கந்தசாமியின் மனைவி பாக்கியாவுக்கும் நாகராஜுக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக கந்தசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாகராஜை கந்தசாமி பலமுறை கண்டித்துள்ளார். கள்ளக்காதல் தொடர்பான பிரச்சினையால் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனால், கந்தசாமியின் ஆத்திரம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று காலை நாகராஜ் தனது இருசக்கர வாகனத்தில் டீ வாங்குவதற்காக நரசீபுரம் தெற்கு ரத வீதி வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு காத்திருந்த கந்தசாமி, நாகராஜை வழிமறித்துள்ளார். கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கந்தசாமி தன்னிடம் வைத்திருந்த மிளகாய்ப்பொடியை நாகராஜின் முகத்தில் வீசியுள்ளார். கண்களில் மிளகாய்ப்பொடி பட்டதால் நாகராஜ் நிலைதடுமாறியுள்ளார். இதையடுத்து கந்தசாமி மறைத்து வைத்திருந்த அரிவாளால் நாகராஜை சரமாரியாக தாக்கியுள்ளார்.
தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் கிடைத்ததும் ஆலந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தப்பிச் சென்ற கந்தசாமியை பிடிக்க போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் கந்தசாமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தனது கையில் காயம் ஏற்படுத்திக்கொண்ட நிலையில், போலீசார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகராஜுக்கும் பாக்கியாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததா, அந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே இருவருக்கும் என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டன, கொலைக்கு முன்பு நடந்த வாக்குவாதத்தின் முழு பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் உள்ளிட்ட தடயங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
பாக்குமட்டை வியாபாரியாக இருந்த நாகராஜ், திமுக பிரமுகராகவும் செயல்பட்டு வந்துள்ளார். நீண்டகால நண்பராக இருந்த நபரே கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை கொலை செய்த சம்பவம் நரசீபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அடுத்தடுத்து நடைபெறும் கொலை சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Also Read: பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!



