நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று ஜெய்லர் படத்தை பார்ப்பதற்கு என 10 தேதி விடுமுறையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜெயிலர் படத்தை பார்ப்பதற்காக விடுமுறை வழங்க கோரி தங்களது நிறுவன ஊழியர்கள் விடுப்பு விண்ணப்பம் வழங்குவதை தடுக்கும் வகையில் 10 ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முடிவு எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அதோடு பைரஸியை தடுப்பதற்காக பணியாளர்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழகம் மற்றும் பெங்களூரில் 8 கிளைகளைக் கொண்ட இந்த நிறுவனம் அனைத்து கிளைகளுக்கும் இந்த விடுப்பு பொருந்தும் என்றும், “நம் அப்பா காலம், நமது காலம், நமது பிள்ளைகள் காலம், நமது பேரப்பிள்ளைகள் காலம் என அனைத்து காலத்திற்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான்” என குறிப்பிட்டு “ரஜினிகாந்த் வாழ்க” என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.