இமாச்சலப் பிரதேசத்தைச் சார்ந்த 28 வயது பணிப்பெண் ஒருவர் தனது காதலனை சந்திக்க வந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த பெண்ணின் காதலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சர்வதேச விமான நிறுவனத்தில் பணி பெண்ணாக பணிபுரியும் 28 வயது இளம் பெண் ஒருவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் தனது காதலனை சந்திப்பதற்காக அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி இரவு அவர்கள் தங்கி இருந்து அடுக்குமாடி கட்டிடத்தில் நான்காவது மாடியில் இருந்து அந்தப் பெண் விழுந்து இறந்திருக்கிறார். இது தொடர்பாக அவரது காதலனை காவல்துறை கைது செய்திருக்கிறது. மேலும் காவல்துறையின் விசாரணையில் அந்தப் பெண் சமீபத்தில் தான் துபாயிலிருந்து இந்தியா திரும்பியதாக தெரிகிறது. அவரது காதலனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக அந்த இளம் பெண்ணின் காதலர்தான் முதலில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். முதலில் இந்த வழக்கை தற்கொலையாக பதிவு செய்த காவல்துறை அவரது காதலரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை அளித்ததால் தற்போது கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. அந்தப் பெண்மணியின் காதலர் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவர் கேரளாவைச் சார்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது பற்றி தகவல் தெரிவித்துள்ள காவல் துறையை அந்தக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து ஒருவரால் தனியாக குதிக்க முடியாது என தெரிவித்திருக்கின்றனர்.