டெல்லியில் வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை, உற்பத்தி மற்றும் வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிகபட்சமாக டெல்லி மாநிலம் காற்று மாசுவால் திணறி வருகிறது. அங்கு கடந்த சில ஆண்டுகளாகவே காற்றின் தரம் மிக மிக மோசமான நிலையில், இருந்து வருகிறது. இதனால் டெல்லியில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை அமலில் இருந்து வருகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை தடை விதித்து அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “டெல்லியில் இந்த முறை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும், நேரடி விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும். தடையை கடுமையாக அமல்படுத்த டெல்லி போலீஸ், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும். டெல்லியில் கடந்த ஆண்டை போல் மாசு அபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், இந்த முறையும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.