திருநெல்வேலி அருகே, பாஜகவை சார்ந்த பிரமுகர் ஒருவர், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, மூளிகுளத்தை சேர்ந்தவர் ஜெகன்(34). இவர் திருநெல்வேலி மாவட்ட பாஜகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகின்றார். இவர் நேற்று இரவு மூளிக்குளம் கடைவீதியில் தன்னுடைய நண்பர்களுடன் உரையாடிவிட்டு, வீட்டுக்கு சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில், பயங்கர ஆயுதங்களோடு, வந்த ஒரு மர்ம கும்பல், அவரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில், சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
இந்த சம்பவத்தால், இரத்த வெள்ளத்தில் சரிந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெகனை, அக்கம் பக்கத்தில் இருந்த நபர்கள், மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து, பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர், உயிரிழந்த ஜெகனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள், பாஜக பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.