மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவிகிதமாக உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை ஆகிய 3 முக்கிய ரயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது என்று தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக கூறினார். மேலும், பிரதமர் மோடியின் கரீப் கல்யாண் அன்ன யோஜனதா திட்டத்தின் கொரோனா காலத்தில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. அந்த நடைமுறை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.

தற்போதைய அகவிலைப்படி 34 சதவீதமாக உள்ளது. இது தற்போது 4 சதவீதம் அதிகரித்த பின்னர், 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசின் இந்த முடிவால் தற்போதுள்ள 50 லட்சம் மத்திய ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள். 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அரசாங்கத்தின் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும். முன்னதாக மார்ச் 2022 இல், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது அது 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்படி, ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளத்தில் இரண்டு மாத டிஏ ஏரியர் கிடைக்கும்.