தென் தமிழகம், டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இந்த நிலையில், தென் தமிழகம், டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர மாவட்டங்கள், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.
தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஏப்.6-ம் தேதி வரையிலான நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 37 டிகிரி பாரன்ஹீட் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதன்படி, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 102 டிகிரி வரையும், கடலோர பகுதிகளில் 98 டிகிரி வரையும் உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 78 டிகிரி முதல் 96 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். தமிழகத்தில் காற்றின் ஈரப்பதம் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 சதவீதம், மற்ற நேரங்களில் 40-70 சதவீதம், கடலோரபகுதிகளில் 50-80 சதவீதம் என்ற அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.