கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற 17 வயது முதல் 35 வயது வரை உள்ள இளம் கலைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் குரலிசை, கருவியிசை, ஓவியம், பரதநாட்டியம், கிராமியக்கலை ஆகிய பிரிவுகளில் மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகளை ஆண்டுதோறும் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் இப்போட்டிகள் 2022-2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டு 570 வெற்றியாளர்களுக்கு ரூ 26.60 இலட்சம் ரொக்க பரிசாக, பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. 38 மாவட்டங்களிலும் 5 கலைப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற 190 இளம் கலைஞர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மாநில அளவிலான போட்டியானது சென்னையில் 24.09.2023 ஞாயிறு அன்று நடத்தப்பட்டது. இசை, நடனப் போட்டிகள் அரசு இசைக்கல்லூரி வளாகத்திலும் ஓவியப்போட்டிகள் கவின் கலைக்கல்லூரி வளாகத்திலும் நடத்தப்பட்டது.
குரலிசைப் போட்டியில் சென்னை, ஸ்ரீஸ்வாரத்மிகா, கன்னியாகுமரி எஸ்.பவநேத்ரா, மதுரை எஸ்.மீனாட்சி ஆகியோரும், கருவியிசைப் பிரிவில் நாதஸ்வரக் கலைஞர் கரூர் பா.செல்வம், தவில் கலைஞர் மயிலாடுதுறை பா.முத்துக்குமார். வயலின் கலைஞர் சென்னை பி.வெண்ணிலா ஆகியோரும், பரதநாட்டியப் பிரிவில் கிருஷ்ணகிரி சி.ஜெயவீரபாண்டியன் . இராணிபேட்டை ஏ.சுதர்சன், சென்னை எஸ்.சஹானா ஆகியோர் முறையே மூன்று இடங்களை பெற்றனர்.
கிராமியக்கலைப்பிரிவில் திருப்பத்தூர் பி.குமரேசன், செங்கல்பட்டு அ.அர்ஜீன், ஈரோடு க.தேவி ஆகியோரும், ஓவியப் பிரிவில் திருவள்ளூர் மு.மணிகண்டன், இராணிபேட்டை ஆ.பணக்கோட்டி, சிவகங்கை ஏ.ஜானிராஜா ஆகியோர் முறையே மூன்று இடங்களை பெற்றனர்.
கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் அக்டோபர் மாதத்தில் நடத்தப்படவுள்ள இசை விழாவில், மாநிலக் கலைப் போட்டியில் வெற்றி பெற்ற 15 கலைஞர்களுக்கு முதல் பரிசாக ரூ.30,000/- இரண்டாம் பரிசாக ரூ.20.000/- மூன்றாம் பரிசாக ரூ.10,000/- என ரூ.3.00 இலட்சத்திற்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.