தமிழகத்தில் தமிழகத்தில் ஐசியுவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக ஆட்சியில் தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தராது என கூறப்பட்டது. இளையராஜா உள்ளிட்ட 4 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியில் மோடி தலைமையிலான அரசு, அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும், வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இதனை, தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியலை தாண்டி வாழ்த்தப்பட வேண்டியவர் இளையராஜா.
ஐசியுவில் கட்சியை வைத்துள்ள கே.எஸ்.அழகிரி அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும். ஐசியுவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆக்சிஜனாக திமுக உள்ளது. அதனை நிறுத்திவிட்டால், ஒன்றில் கூட டெபாசிட் கிடைக்காது. ஓட்டு இயந்திரத்தில் அவர்களின் சின்னத்தை அச்சிடுவது கூட வீணாகிவிடும். கே.எஸ்.அழகிரி அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டு, சிந்தி சிதறி கிடக்கும் கட்சியை ஒட்ட வைக்க ‘பெவிகுவிக்’ வாங்கி தர தயாராக உள்ளோம். உருண்டு வருவோம், நடந்து வருவோம் அதனை அழகிரி பார்ப்பார். அன்று காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதப்படும். ஒரு கட்சி என்ன அவமானப்படுத்தினாலும், கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கூட கூட்டணியில் இருப்போம் என காங்கிரஸ் நினைக்கிறது”. இவ்வாறு அவர் பேசினார்.