திருச்சி மாநகரம் பொன்மலை அருகே திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் பாண்டியன் (38). இவர் சொந்தமாக, போர்வெல் அமைக்கும் தொழில் நடத்தி வருகிறார். இவர், பாஜகவில் இணைந்த பிறகு கட்சி பணிகளில் ஆர்வம் செலுத்தினார். அப்போது திருச்சியைச் சேர்ந்த பாஜக மகளிரணி நிர்வாகி ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார். அவர் தனது மகள், கணவனை இழந்த நிலையில் சென்னையில் வசித்து வருவதாக கூறி இருக்கிறார். இதனையடுத்து இருவரும் அறிமுகமாகி கட்சி தொடர்பாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில், போர்வெல் பணிகளுக்காக சென்னை வந்த ஜெயராம் பாண்டியன், அப்பெண்ணிடம் பேசி பின்னர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண், திரைதுறையை சேர்ந்த உதவி இயக்குனர் ஒருவருடன் ‘லிவ்விங் டூ கெதர்’ முறையில் வாழ்ந்து வருவது ஜெயராமுக்கு தெரியவந்தது. இதனால் விரக்தி அடைந்த அவர், அப்பெண்ணை தான் அடைய வேண்டும் என்ற ஆசையில் தடை ஏற்பட்டுவிட்டதாக கருதினார். இதனால் அவர்கள் இருவரையும் பிரிக்க ஜெயராம் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக, அந்தப் பெண்ணை போட்டோ எடுத்தது மட்டுமல்லாது, அந்த போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளார். அந்த போட்டோவை அப்பெண்ணுடன் வாழ்ந்து வந்த உதவி இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் திட்டமிட்டப்படி இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.
ஆனால், சிறிது நாட்கள் கழித்து இருவரும் பேசியபோது அது மார்பிங் செய்யப்பட்ட போட்டோ என்பது உறுதியானதால், இருவரும் சேர்ந்து சென்னை வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவுச் செய்து தலைமறைவான ஜெயராம் பாண்டியனை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஜெயராம் பாண்டியன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையிலிருந்து விரைந்த தனிப்படையினர், திருச்சியில் பதுங்கி இருந்த ஜெயராம் பாண்டியனை கைது செய்தனர். இச்சம்பவம் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.