புதுச்சேரி ஒதியம் பட்டு அடுத்த நரிக்குறவர் காலணியில் இன்று அதிகாலையில் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் புத்தாண்டு விருந்துக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பருந்து, கிளி, பால் ஆமை, கொக்கு, ஆள்காட்டி குருவி, நாரை உள்ளிட்ட 63 வகையான பறவைகள் மற்றும் முயல் கறி, உடும்பு கறி, மான் கறி, ஆகியவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறவைகள் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், வெடி மருந்துகள், கன்னி வலைகள், மற்றும் கொக்கு மருந்து, ஆகியவைகளையும் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வனத்துறை துணைக்காப்பாளர் வஞ்சுள வள்ளி ஸ்ரீதர் கூறியதாவது, புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக க்யூ.ஆர்.கோடு உருவாக்கி whatsapp குழு மூலம் ஆன்லைனில் பறவைகள் மற்றும் மான்கறிகளை விற்பனை செய்து வருவதை ஒரு சிலர் தொழிலாக கொண்டுள்ளனர். தற்போது புத்தாண்டு விருந்துக்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பறவைகள் மற்றும் மான் கறி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் இந்த வியாபாரம் நடந்துள்ளது அவர்கள் முழு விபரத்தையும் சேகரித்து வருவதாகவும், பறவைகள் வேட்டையாடுவதும் மற்றும் பறவைகள் கறிகளை வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் இவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையை வனத்துறை மற்றும் காவல் துறை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.