கரூர் மாவட்டம் நச்சலூர் அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு தேவிகா (16), விக்னேஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். தேவிகா 11ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, கடந்த ஓராண்டாக வீட்டிலிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி வீட்டில் இருந்த தேவிகா நள்ளிரவில் காணவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குளித்தலை காவல் நிலையத்தில் தேவிகாவின் தாய் கலைவாணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவிகாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று காலை தேவிகா ஊருக்கு அருகாமையில் உள்ள குஞ்சப்பன் என்பவரது விவசாய கிணற்றில் சடலமாக மிதந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தேவிகாவின் உடலை கைப்பற்றி மேலே கொண்டு வந்தனர். அப்போது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் குளித்தலை போலீசார், தேவிகாவின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் எனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குளித்தலை போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, தேவிகாவின் உடல் வைக்கப்பட்டு இருந்த அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அரங்கு முன்பு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அப்போது தேவிகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரை கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தேவிகாவின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, திமுக கவுன்சிலர் மகனைக் காதலித்ததால் 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.