மதுரை திமுக பிரமுகர் வி.கே.குருசாமி பெங்களூரில் 70 முறை அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதுரையில் திமுக பிரமுகர்களில் ஒருவராக இருந்தவர் வி.கே.குருசாமி. இவர், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். விகே குருசாமிக்கும் அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜபாண்டியனுக்கும் 25 ஆண்டுகாலமாக பகை இருந்து வந்துள்ளது. இருதரப்புக்கும் இடையேயான மோதல்களில் இதுவரை மொத்தம் 15 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் முதல் வாரம் மதுரையில் இருந்து பெங்களூரு சென்றார் வி.கே.குருசாமி. பெங்களூரிலேயே வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என திட்டமிட்டிருந்தார். இதற்காக பெங்களூரில் முகாமிட்ட நிலையில், ஹோட்டல் ஒன்றில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், விகே குருசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த வி.கே.குருசாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வி.கே.குருசாமி உயிரிழந்துவிட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜபாண்டியன், வி.கே.குருசாமி இருவரும் கமுதி அருகே ஒரே ஊரை சேர்ந்தவர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஊராட்சித் தேர்தலில் தொடங்கி பகை நீடித்து வந்தது. ராஜபாண்டியன் மகனை வி.கே.குருசாமி தரப்பு கடத்தி சென்று எரித்துக் கொலை செய்தது. இதனால், இந்த சண்டை உக்கிரமடைந்தது. இதற்கிடையே, வி.கே.குருசாமி கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தது, நாட்டு வெடிகுண்டு தயாரித்தது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த வி.கே.குருசாமி, பெங்களூருக்கு தப்பி தலைமறைவாக வாழ திட்டமிட்டிருந்த நிலையில், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.