வழக்கில் சிக்கிய கணவரை விடுவிப்பதாக கூறி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியைச் சேர்ந்தவர் சுனு. இவர் கோழிக்கோடு கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கொச்சி திருக்காக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், இன்ஸ்பெக்டர் சுனு உள்பட 6 பேர் மீது திருக்காக்கரை போலீசில் கூட்டு பலாத்கார புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த இளம்பெண்ணின் கணவர் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இருந்து கணவரை விடுவிக்க வேண்டும் என்றால் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறி மிரட்டி அந்த இளம்பெண்ணை அவரது வீட்டில் வைத்தும், கடவந்திரா என்ற இடத்தில் வைத்தும் இன்ஸ்பெக்டர் சுனு உள்பட 6 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த மே மாதம் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று அந்த இளம்பெண்ணை சுனு மிரட்டியுள்ளார்.

இதனால், அவர் இதுவரை போலீசில் புகார் செய்யாமல் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த இளம்பெண் கொச்சி திருக்காக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக இன்ஸ்பெக்டர் சுனு உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று திருக்காக்கரை போலீசார் கோழிக்கோடு சென்று இன்ஸ்பெக்டர் சுனுவை கைது செய்தனர். அவரை விசாரணைக்காக கொச்சிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் கணவரின் நண்பர், கோயில் ஊழியர் உள்பட மேலும் 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.