பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவன் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் சிக்கியதால் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவை சேர்ந்த மாணவன், சென்னை அடுத்த பொத்தேரியில் உள்ள கல்லூரியில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்தான். அவர் தங்கி இருந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்திய போது, கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றினர். இதையடுத்து மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு மாணவனை அழைத்து வந்த போலீசார் நிகிலை எச்சரித்து, அறிவுரை கூறிய பிறகு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனால், மன உளைச்சலில் இருந்த நிகில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தனியார் குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள தனது அறையின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், திமுக அரசு காவல்துறை சுதந்திரமாக செயல்படச் செய்து போதை பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழித்திட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தை பாதுகாத்திட வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள் எக்ஸ் பதிவில்,”விடியா திமுக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து, போதை பொருள் புழக்கம் தடுக்கவேண்டும் என 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியும் எச்சரித்தும் வந்துள்ளேன்.
அப்போதே உரிய நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் புழக்கத்தை தடுத்திருந்தால், இன்றைய தினம் மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி அவர்களது வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்பட்டு இருக்காது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட செய்திகள் வந்துள்ளன.
இச்சோதனையின் ஊடாக, மாணவர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து, பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர சொல்லியதால் மன அழுத்தத்தில் தவறான முடிவெடுக்க முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது. இனியாவது இந்த விடியா திமுக அரசு காவல்துறை சுதந்திரமாக செயல்படச் செய்து போதை பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழித்திட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தை பாதுகாத்திட விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.
Read more ; ‘மாணவர்களின் திசைகாட்டி..’ ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்..!!