ஸ்பீடு பிரேக்கர்களுக்கு அருகில் மின்கம்பங்களை அமைக்க கூடாது என மின்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவின் கடிதத்தைத் தொடர்ந்து, சாலைகளில் உள்ள ஸ்பீடு பிரேக்கர்களுக்கு அருகில் மின்கம்பங்களை அமைக்க வேண்டாம் என்று TANGEDCO அதன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத வேகத்தடையில் மோதி, சாலையோர மின்கம்பத்தில் தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டியின் உயிரிழப்பு சம்பவத்தை உயர் அதிகாரி தனது கடிதத்தில் மேற்கோள் காட்டி, இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதிகாரிகள் ஆய்வு செய்து, போதிய இடவசதி இருந்தால் ஸ்பீட் பிரேக்கர்களுக்கு அருகில் உள்ள மின் கம்பங்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக”சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். மின்கம்பங்கள் சாலையின் நடுவில் அமைந்திருந்தாலோ, சாலை விரிவாக்கம் செய்யும் போது நடுவில் வந்தாலோ, அத்தகைய மின்கம்பங்களை உடனடியாக சாலையோரம் பெயர்த்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.