தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரைச் சேர்ந்த, 29 வயது கவுன்சிலர் டயானா கார்னெரோ மக்கள் கூட்டத்தின் முன்பு, பட்டப்பகலில், இரு மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். குற்றவியல் போதை பொருள் கும்பல்களால் தென் அமெரிக்காவில் அரசியல் பிரமுகர்களின் தொடர் கொலைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி ரஃபேல் கொரியாவின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட குடிமக்கள் புரட்சி இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர் டயானா கார்னெரோ. 29 வயதான அவர், நாராஞ்சலின் கவுன்சிலராக இருந்தார். கடந்த புதன்கிழமை குயாஸ் மாகாணத்தில் உள்ள நாரஞ்சல் நகரில், ஒரு கவுன்சில் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
பின்னர் அப்பகுதியில் உள்ள மோசமான சாலைகளை படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சமீபத்தில் ஈக்குவேட்டரில் பல கைதிகள் சிறையில் இருந்து தப்பிச் செல்வதும், அரசியல் பிரபலங்கள் கொல்லப்படுவதும் நடந்த வண்ணம் உள்ளன.
2023 தேர்தலுக்கான முன்னாள் வேட்பாளரும் அதே கட்சியின் உறுப்பினருமான லுயிசா கோன்சாலெஸ், கார்நெரோவின் மரணத்தை தனது X தளத்தில் உறுதிப்படுத்தினார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்தார்.
நவம்பர் 2023 பதவியேற்ற பின் ஜனாதிபதி, 22 போதை கும்பல்களை பயங்கரவாத அமைப்புகளாக பெயரிட்டு, அந்த கும்பல்களை எதிர்த்து போரிடப் போவதாக கூறினார். அந்த கும்பல்களை ராணுவ இலக்காகவும் அறிவித்தார். இதற்கு பழி தீர்க்க அந்த கும்பல்கள், பொதுமக்களை கொல்வதுடன், காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளை பணய கைதிகளாகவும் பிடித்து சென்றனர்.
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர், பெர்னான்டோ விலாவிசென்சியோ, ஆகஸ்ட் 2023இல் படுகொலை செய்யப்பட்டார். வாக்கெடுப்பின் முதல் சுற்றுக்கு 11 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி டேனியல் நோபோவா தலைமையிலான அரசாங்கம் வன்முறையாளர்களுக்கு எதிராக இரவு நேர ஊரடங்கு மற்றும் அவசர காலநிலையை பிரகடனம் செய்தார். அதன்பின் ஒரே வாரத்தில் துறைமுக நகரான குயாவில், அரசுக்கு சொந்தமான டிசி தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை பற்றி விசாரித்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் சீசர் சுயாரஸ், வாகனத்தில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வரிசையில் கவுன்சிலர் டயானா கார்னெரோவும் கொல்லப்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.