சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைசட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அடங்கியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கை பொறுத்தவரை ஏற்கனவே சாட்சிகள் விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி விட்ட காரணத்தினால் மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Read more ; என் தந்தை தோனியை திட்டியது ஏன்..? யுவராஜ் சிங் சொன்ன அதிர்ச்சி காரணம்..!!