மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது 16 வயது மகளை, பெற்ற தந்தையே சீரழித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார். சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், காரணம் தெரியாமல் தொடர்ந்து வயிற்று வலி என்பதால், மாணவியின் தாய் அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்து பார்த்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியிடம் விசாரிக்கையில், அவரது தந்தையும், பக்கத்து வீட்டு இளைஞரும் மிரட்டி பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாணவி கர்ப்பமானது குறித்து காவல்துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர். பின்னர், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார், மன நல ஆலோசகர் மூலமாக சிறுமியிடம் பேசி விசாரித்துள்ளனர். அப்போது தான் இந்த அதிர்ச்சி உண்மை வெளியாகி உள்ளது. பயத்துடனேயே சிறுமி, மனநல ஆலோசகரிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் 32 வயது வாலிபருடனான பழக்கம் குறித்தும், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியது குறித்தும் கூறியுள்ளார்.
அதே போன்று, தனது தாயார் வேலைக்கு சென்ற சமயங்களில் தந்தையும் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார் என்று அழுதபடியே கூறியுள்ளார். இதுதொடர்பாக போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியின் தந்தையையும், பக்கத்து வீட்டு இளைஞரையும் கைது செய்தனர். கர்ப்பமான சிறுமிக்கு மருத்துவர்கள் மூலம் உரிய சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.