தற்போது உள்ள காலகட்டத்தில், ஒரு சின்ன வேலையை செய்வதற்கு கூட பலர் மிகவும் சிரமப்படுகின்றனர். 5 நிமிடம் நடப்பதற்க்குள் பலர் சோர்வடைந்து விடுகின்றனர். ஆனால் நமது முன்னிர்கள் எத்தனை வயது ஆனாலும் பல இடங்களுக்கு நடந்தே தான் செல்வார்கள். அவர்களிடம் இருந்த சுறுசுறுப்பு நம்மிடம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்படி நாம் எப்போதும் சோர்வாக இருக்க முக்கிய காரணம், உடலில் இருக்கும் நச்சுக்களை உணவு மூலம் அகற்றாமல் இருப்பது தான் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதற்காக நாம் அதிக பணம் கொடுத்து கண்ட மாத்திரைகளை வாங்கி நமது உடலில் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்க தேவை இல்லை. இது போன்ற சோர்வை நீக்க, மருத்துவர் நித்யா இயற்கையான மருந்து ஒன்றை கூறியுள்ளார்.
ஆம், இதற்காக நீங்கள் அதிக பணம் செலவிட வேண்டிய அவசியம் இல்லை. சாதரணமாக வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து கொள்ளு ரசம் வைத்து சாப்பிடுவது நல்லது என்று அவர் பரிந்துரைத்துள்ளார். இந்த ரசத்தில் நாம் பயன்படுத்தும் கொள்ளு, உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுவது மட்டும் இல்லாமல், உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.
உங்களுக்கு ரசமாக சாப்பிட விருப்பம் இல்லை என்றாய், நீங்கள் கொள்ளை துவையலாக அரைத்து சாப்பிடலாம். மேலும், கொள்ளு சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள், பிரண்டை, முடக்கத்தான் போன்ற மூலிகைகளை துவையலாக அரைத்து சாப்பிடலாம். இது போன்ற துவையல்களை நாம் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்வதால், நமது நரம்பு மண்டலம் வலுவடையும்.
இதேபோல், உங்களுக்கு சளி பிடித்திருந்தால் இனி மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிடாமல், சிற்றரத்தை, பேரரத்தை மற்றும் திப்பிலி ஆகியவற்றை சேர்த்து குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இதனால் சளி பிரச்சனை விரைவாக குணமாகி விடும். மேலும், இதனால் எந்த பக்கவிளைவும் இருக்காது. நமது முன்னோர் இது போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டதால் தான் அவர்கள் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.
ஆனால் நாம், இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை விட்டுவிட்டு, உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை மட்டும் தேடிச்சென்று சாப்பிடுகிறோம். இதனால் தான் நமது முன்னோர்களுக்கு இருந்த சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் நமக்கு இருப்பது இல்லை. நாம் நமது அன்றாட உணவில் வால்மிளகு சேர்க்கும் போது அவை நரம்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடல் சோர்வை தடுக்கிறது.
இதற்கு முதலில், வால்மிளகை சற்று வறுத்து பொடியாக்கி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். பின்பு இதை ரசம் அல்லது மற்ற குழம்பு வைக்கும் போது அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் சோர்வு முற்றிலும் நீங்கி சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Read more: முகத்தில் பரு அதிகமா இருக்கா? இதை பண்ணுங்க, முகம் எப்படி ஜொலிக்குதுன்னு நீங்களே பாப்பீங்க..