இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. QR Code-ஐ ஸ்கேன் செய்வது அல்லது மொபைல் எண் மூலம் நேரடியாக பணம் செலுத்த முடியும்..

இந்நிலையில் ரூ.2000-க்கும் மேல் யுபிஐ முறையில் பணவரித்தனை மேற்கொண்டால் 1.1% பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என்று NPCI (National Payments Corporation of India) அறிவித்தது.. இதனால் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான யுபிஐ பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. இந்த சூழலில் வணிக பயன்பாட்டுக்கான யுபிஐ பரிவர்த்தனைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து என்பிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் “ யுபிஐ பரிவர்த்தனை இலவசம், வேகமானது, பாதுகாப்பானது மற்றும் தடையற்றது” என்று தெரிவித்துள்ளது.. மேலும் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு வங்கிக் கணக்கிலிருந்து கணக்கு பரிவர்த்தனைகளுக்கான யுபிஐ பரிவர்த்தனை தொடர்ந்து இலவசமாக இருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளது. அதாவது, வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்ற UPIஐப் பயன்படுத்தினால், கட்டணம் வசூலிக்கப்படாது.
மேலும், ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகளுக்கு ஒரு சிறிய கட்டணம் இருக்கும் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது. அதாவது வாடிக்கையாளருக்கும் வணிகர்களுக்கும் இடையேயான பரிவர்த்தனைகளுக்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்படும். இருப்பினும், இந்த கட்டணம் வாடிக்கையாளர்களால் செலுத்தப்படாது, ஆனால் வணிகரால் செலுத்தப்படும்.
பேடிஎம் வாலட்கள் மற்றும் டிஜிட்டல் வாலட்கள் போன்றவை மூலம் செய்யப்படும் யுபிஐ பேமெண்ட்டுகளுக்கு ஏப்ரல் 1 முதல் 1.1% கட்டணமாக வசூலிக்கப்படும்.. அதாவது, 2000 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு இந்த கட்டணம் பொருந்தும். அதே நேரம் 2000 ரூபாய்க்கு குறைவான வாலட் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.