அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டாவது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகரில், அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து, இரண்டாவது நாளாக வன்முறைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலையை மறித்து, பான் அருணாச்சல கூட்டு வழிநடத்தல் குழு-ஏபிபிஎஸ்சியின் 13 அம்ச கோரிக்கை சாசனங்களை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில், இட்டாநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததால், நீதிமன்றம், ராஜ் பவன் மற்றும் அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இட்டாநகரில் ‘பொதுமக்கள்’ பந்த் இரண்டாவது நாளாக நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
இட்டாநகர், நஹர்லாகுன், நிர்ஜூலி மற்றும் பந்தேர்தேவா பகுதிகளை உள்ளடக்கிய தலைநகர வளாகத்தில், வணிக நிறுவனங்கள், சந்தைகள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டு, வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.