திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மாலை 3 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதை தடுக்க 1,500-க்கும் மேற்பட்ட காவலர்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விசுவநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளன. கோயிலுக்கு இந்து பக்தர்களும், தர்காவுக்கு இஸ்லாமியர்களும் சென்று வழிபட்டு வந்தனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டு போராட்டத்தை முன்னெடுத்தன. இதற்கு, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்பட்டதால், திருப்பரங்குன்றம் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், முருகனின் முதல்படை வீடான ‘திருப்பரங்குன்றம் மலையை காப்போம்’ என்ற கோரிக்கையுடன் இன்று இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அறப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும் போராட்டத்தை தடுக்க கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று நடைபெறும் இந்த போராட்டத்தில் இந்து முன்னணியின் மாநில தலைவர், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பல்வேறு பாஜகவினர் இதில் பங்கேற்க உள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவு வருகிறது.