திருப்பூர் மாவட்டம் முரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மாங்கனி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மணிமாறனுக்கும் அவரது பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதனையறிந்த மணிமாறன் தனது கள்ளக்காதலியின் திருமணத்தை நிறுத்த முடிவு செய்து, இதற்காக அந்த இளம்பெண்ணுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு, கள்ளக்காதலி குறித்து தவறான தகவல் எழுதி மொட்டை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை மணிமாறன் வீட்டில் வைத்து எழுதிய நிலையில், அப்போது கடிதத்தில் தவறு ஏற்பட்ட போது அந்த கடிதத்தை கசக்கி வீட்டிலேயே தூக்கிப் போட்டுள்ளார்.
அதனை மணிமாறனின் மனைவி மாங்கனி எடுத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து தனது கணவரிடம் கேட்டதுடன், இளம்பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடுமாறும் எச்சரித்தார். இருப்பினும் மணிமாறன் தனது கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்ள முயற்சிகள் எடுத்து வந்தார். மேலும், தனது கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரிந்து விட்டதால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர்கள் 4 பேரின் உதவியை நாடினார். அவர்களும் மணிமாறனின் மனைவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்படி கடந்த 2ஆம் தேதி இரவு மாங்கனி வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது மணிமாறனின் நண்பர்கள் 4 பேரும் வீட்டிற்கு வந்தனர்.
பின்னர் மாங்கனி தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் சென்ற 4 பேரும் தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றனர். மாங்கனி சத்தம் போடவே 4 பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு மூலக்காரணம் தனது கணவன் மணிமாறன் என்பது தெரியவரவே இது குறித்து மாங்கனி ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கணவர் உள்பட 4 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.