நாட்டிலேயே மிகவும் பலவீனமான மற்றும் திறமையற்ற பிரதமர் என்று பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்..
தெலங்கானாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திர சேகர ராவ் மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.. மேலும் 1970களில் எமர்ஜென்சியை பிரகடனப்படுத்தும் அளவுக்கு தைரியமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அதேசமயம் மோடியின் ஆட்சியில் நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்..
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஊழல் நிறைந்தது என்று குற்றம் சாட்டிய அவர்,மத்தியில் பாஜக அல்லாத அரசு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.. மேலும் “ இரட்டை என்ஜின் வளர்ச்சிக்கான உங்கள் டபுள் என்ஜின் திட்டத்தை திட்டத்தை நாங்கள் ஏற்கிறோம். இனி, எந்த இரட்டை எஞ்சின் வர வேண்டும், அது பாஜக இரட்டை எஞ்சினாக இருக்க வேண்டுமா அல்லது பாஜக அல்லாத இரட்டை எஞ்சினாக இருக்க வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். நாட்டுக்கு பாஜக அல்லாத இரட்டை எஞ்சின் ஆட்சி தேவை என்பதை உண்மைகளும் புள்ளிவிவரங்களும் தெளிவாகக் கூறுகின்றன.
மோடி போன்ற பலவீனமான, திறமையற்ற பிரதமர் நாட்டிலேயே இல்லை…என்பதை இப்போது சொல்கிறேன்.. எப்போது வேண்டுமானாலும் இதை சொல்வேன்.. ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் போன்ற திட்டங்களை இறுதி செய்வதற்கு முன், பாஜக அரசு மற்ற கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்.. ராணுவத்தில் இளைய தலைமுறை தேவை என்று சொல்கிறார்கள், நம் நாட்டிற்கு கூட இளம் பிரதமர் தேவை..
பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே, நாட்டைக் காப்பாற்ற ஒரே வழி.. ஜிடிபி சரிவு, பணவீக்கம் உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் இதர விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் 8.3 சதவீதம் வரை அதிகரிப்பு ஆகியவை பாஜக அரசின் திறமையின்மையை அம்பலப்படுத்துகின்றன..” என்று தெரிவித்தார்..