முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி கோவையில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டதாகக் கூறி, நிகழ்ச்சியை புறக்கணித்தார் செங்கோட்டையன்.
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பட்டு வரும் செங்கோட்டையன் நேற்று டெல்லிக்கு சென்ற நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார். இந்தநிலையில், உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் செங்கோட்டையனுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான பணிகளை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. செங்கோட்டையன் கோரிக்கை அடிப்படையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய புலனாய்வு அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Read more: கன்னியாகுமரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உதயமானது..!! தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு..!!