வெகு காலமாகவே தொலைபேசியின் மூலமாக வரும் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவற்றை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என்று அரசால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றமடைந்து விட்ட நிலையில் இன்னமும் கூட இது போன்ற தேவையற்ற அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் நம்பி அதில் முதலீடு செய்து ஏமாற்றமடையும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கோயமுத்தூர் வெள்ளலூர் எல்.ஜி நகர் 3வது பிரிவை சேர்ந்தவர் நிஷாந்த்(30). இவர் நேற்று முன்தினம் கோவை மாநகர காவல்துறையின் சைபர்கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை வழங்கினார்.
அந்த புகார் மனுவில் பகுதி நேர வேலை தேடிவந்த நான் என்னுடைய whatsapp லிங்கில் எனக்கு வந்த லிங்கில் இ.பே இணையதள பக்கத்திற்கு சென்று பார்த்தேன், அதில் பணத்தை முதலீடு செய்தால் லாபமடையலாம் என்று கூறப்பட்டிருந்தது.
ஆகவே நான் இதனை நம்பி அதில் தெரிவிக்கப்பட்டிருந்த வங்கி கணக்கு எண்ணுக்கு பல தவணைகளில் ஒட்டுமொத்தமாக 7,13,724 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தேன். ஆனால் அதில் தெரிவித்தபடி எனக்கு லாபத்தொகை எதுவும் வரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத மர்மநபர் மீது மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.