கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொல்லம் நகர் பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் பள்ளியில் நேற்று முன்தினம் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். மேலும் பலவித கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மாலை நான்கு மணி அளவில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி கழிவறைக்கு சென்றார். அங்கு 10-ஆம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். ஒரே சிகரெட்டை நான்கு பேரும் மாற்றி, மாற்றி பிடித்து புகை விட்டுக் கொண்டு இருந்ததை பார்த்ததும் 7-ஆம் வகுப்பு மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். வேறொரு மாணவி தங்களை பார்த்து விட்டதை பார்த்த 10-ஆம் வகுப்பு மாணவிகள் பதட்டம் அடைந்தனர். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என 7-ஆம் வகுப்பு மாணவியை மிரட்டியுள்ளனர். மேலும் யாரிடமும் அந்த மாணவி சொல்லி விடக்கூடாது என்ற பயத்தில் அந்த மாணவியின் தலைமுடியை கத்தரியால் வெட்டி உள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பி சென்ற மாணவி, தலைமை ஆசிரியரிடம் சென்று கூறியுள்ளார். மேலும் இந்த விஷயம் பள்ளி முழுவதும் பரவியதை தொடர்ந்து கொல்லம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை செய்தனர். மேலும் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.